ASTROLOGE

ASTROLOGE

22 June 2011

கன்னி பொதுபலன்-பாகம்-1

கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகர்களின் தோற்றத்தைக்கண்டு அவர்களின் உண்மை வயதை நிர்ணயிக்க முடியாது. வயது முதிர்ந்திருந்தாலும், உண்மையான வயதை விட குறைந்த வயதினராகத் தோற்றம் அளித்திடுவார்கள். நடுத்தரமான உயரமும், இடை சிறுத்தும், அடிமேல் அடி வைத்து நிதானமாக நடக்கும் இவர்கள். எவ்வளவு அவசரமிருந்தாலும் பரபரப்புடன் இயங்கமாட்டார்கள். இவர்கள் பார்க்கும் பொருள்களை எல்லாம் கவர்த்திழுத்து மனதில் இருத்திக் கொண்டு பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அன்று பார்த்ததுபோலவே கூறும் அபாரஞாபகசக்தி பெற்றவர்கள். தரையில் நிற்கும்போது சாய்ந்து நிற்கும் இவர்கள் இடுப்பிலும் சிலர் உதட்டிலும் கையை வைத்துக்கொண்டு நிற்பர். பார்க்கும் பொருளின் குணத்தைக் கிரகித்துக் கொள்வதிலும் இயற்கை அழகை மெய் மறந்து ரசிப்பதிலும் பற்றுதலுடையவர்.

நிதானம், நேர்மை, பொறுமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பிறரை வசீகரிக்கும் பேச்சு இவையனைத்தும் கன்னியா லக்ன ஜாதகர்களின் அணிகலனாகும். சில விஷயங்களில் இவர்களுக்கு தீர்க்க தரிசனமும் ஏற்படுவதுண்டு. எந்த விஷயத்திலும் பிறரது கருத்தை கலந்தாலோசித்து முடிவெடுக்கும் நற்குணம் இவர்களிடம் உண்டு. தன்னைத்தான் தாழ்த்திக் கொண்டு பிறரை உயர்த்திப் பேசும் நற்பண்பும் உடையவர்கள் இவர்கள். பல விஷயங்களைக் ««ட்டுத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் கன்னியில் தோன்றியவர்கள். இவர்களுக்குக் கோபம் வருவதரிது; கோபம் வந்தால் ஓரிரு சத்தத்தோடு மௌனமாகி விடுவார்கள். இவர்கள் எப்போதும குஷியாகவே இருக்கவிரும்புவார்கள்.

கன்னிப் பெண்களிடம் காணப்படும் அச்சம், நாணம் ஆகிய குணங்கள் இந்த லக்னத்தில் பிறந்த ஆண்களிடத்திலும் காணப்படும். தங்களுக்கு பிறரால் ஆகவேண்டியகாரியம் முக்கியமானதாகவும், அவசரமானதாகவும் இருந்தாலும்கூட பிறருடைய சௌகரிய-அசௌகரியங்களை கவனித்துத்தான் அவர்களை அணுகுவார்கள். அவர்கள் தூங்கும் போதாவது அல்லது வேறு காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் காரியம் முடியும் வரை காத்திருப்பார்கள். குழந்தைகளிடமும் அவ்வாறே நடந்துகொள்வார்கள். பேச்சிலும் செயலிலும் பிறர் மனதைப் புண்படுத்த விரும்பமாட்டார்கள். சுறுசுறுப்பான இவர்கள் தமது அறிவாற்றலினால் எதையும் புரிந்த கொள்வர். சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் இவர்களை எவரும் எளிதில் ஏமாற்ற முடியாது. இவர்கள் தமது வாழ்க்கையில் தமக்கென ஏற்படுத்திக்கொண்ட லட்சியங்கள் ஒவ்வொன்றும் இவர்களது செயலில் பிரதிபலிக்கும் வாழ்க்கையின் கடமைகளிலிருந்து தவறமாட்டார்கள். வாழ்க்கையின் லட்சியங்களையும் கடமையையும் தவறாமலிருக்க கால அட்டவணையைக் குறித்துக் கொண்டு, குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பார்கள். காலத்தை வீண்போக்குவது இவர்களுக்கு பிடிக்காது. வெண்ணிற ஆடைகளையே பெரும்பாலும் உடுக்கும் இவர்கள் மிகவும் சிக்கனத்தைக் கையாள்பவராக இருப்பார்கள். குறைந்த ஆகாரம் உட்கொண்ட போதிலும் சத்தான ஆகாரங்களையே உட்கொள்ளுவார்கள். ஆகாரத்திலும் ஆடை, ஆரோக்கியத்திலும் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வயது முதிர்ந்தாலும் எப்பொழுதும் யௌவன பருவத்திலேயே இருக்க நினைப்பவர்களானாலும் சிறு வயதிலேயே மூக்குக்கண்ணாடி போட வேண்டிய நிலை ஏற்படும்.

மிகவும் நாசுக்கான இவர்கள் எதையும் கற்றறிய வேண்டும் என்ற அபிலாஷை உடையவர்கள். அவ்வாறே கசடறக் கற்று தேர்ச்சியடைந்து பாண்டித்தியமும் பெறுவார்கள். நல்ல நடத்தையும், பொறுமையும், நற்குணங்களும், வசீகரத் தோற்றமும் படைத்த இவர்கள் யாவரிடத்திலும் மிகவும் சகஜமாகப் பழகுவார்கள். எதையும் கூர்ந்து கவனிப்பார்கள். நன்கு கற்றுணர்ந்து அறிவாற்றல் பெற்றவராயினும், மற்றவர்கள் தம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அச்சமுடையவர்கள். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்துஎன்ற பழமொழிக் கொப்ப எதிலும் திருப்தியடையும் மனப்பாங்கு பெற்றவர்கள். சாந்த குணமும், அவசியமான வார்த்தைகளை அளந்து பேசும் இயல்வு பெற்ற இவர்கள் படித்து பட்டம் பெற்றவராக இருந்தபோதிலும் அகம்பாவம் கொள்ளமாட்டார்கள். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையமெல்லாம் என்றபெருந்தன்மையுடயவர்கள். தான் கற்றறிந்த வித்தையை எல்லாருக்கும் போதிப்பார்கள். நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களாதலால், சிறு விஷயங்களையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். பற்றிருந்தும் பற்றற்றவர்கள் போல விளங்குவார்கள். இவர்களுக்கு சகோதரர்களும் அதிகம் இருக்கமாட்டார்கள். நன்னடத்தையுடைய இவர்கள் சொல்லுக்கு எக்காலத்தும் நல்ல செல்வாக்கு உண்டு. பிறருக்கு நல்ல வழியைப் போதித்துக் காட்டுவார்கள். இவர்களுடைய மத்தியஸ்தத்துக்கு நல்ல மதிப்பு உண்டு. இவரைப்பின்பற்றுபவர்கள் நல்ல நிலையை எய்திடுவார்கள். உறவினர்களால் தான் இவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படுமே தவிர வேறு எதிரிகள் இருக்கமாட்டார்கள்.

இவர்கள் மிருதுவான வார்த்தைகளை நயமாகப் பேசி பிறரை வசியப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்கள். சிலரது பேச்சில் புலமை பிரகாசித்துக் காட்டும். கவி பாடுவதிலும் வல்லமை பெற்ற இவர்கள் தனிமையில் சங்கீத ஆலாபனம் செய்து தன்னைத்தானே ரசித்துக் கொள்வார்கள். இவர்கள் பேசும் சொற்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படுபவையே அல்லாது நாவளவில் பேசும் வார்த்தைகளல்ல மொழி ஆராய்ச்சியில் பாண்டித்தியமும் புலமையும் பெற்றவர்களாதலால் இவர்கள் பேசும் வார்த்தைகளில் தவறுகள் ஏதும் ஏற்படா ஏதேனும் கூட்டங்களில் ஒரு சிலர் தவறுதலாகப் பேச நேரிடினும், அதை அவர்கள் மனம் புண்படாதவாறு சாமர்த்தியமாக திருத்தும் இயல்பு கொண்டவர்கள். இவர்கள் பெற்ற புலமையாலும் அறிவாற்றலாலும் இவர்களுக்கு ஏற்படும் தற்பெருமையும் புகழ்ச்சியும் இவர்கள் பேசும் சொற்கள் இடையிடையே பிரதிபலிப்பதைக் காணலாம். புராணங்களிலிருந்தும், இதிகாச காவியங்களிலிருந்தும், ஆன்றோர்கள் உலகபிரசித்தி பெற்ற மகான்கள் கூறிய பொன்மொழிகளிலிருந்த அடிக்கடி சமயம் நேரும்போதெல்லாம் மேற்கோள்களுடன் எடுத்துச் சொல்லுவார்கள். பிறருக்கு புத்திமதி சொல்லும் இவர்களது பேச்சில் மற்றவர் தம்மைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்து பிரதிபலிக்கும்.

பிறரது அறிய செயல்களையும், திறமைகளையும் பாராட்டி முகஸ்துதி செய்வார்கள். இவர்களுடைய கலை, கதை, காவியம் ஆகியவை அரசாங்கத்தில் பரிசுகள் பெறும்வாக்கு வன்மை படைத்தவர்களாதலாலும் மற்ற புராண இதிகாசங்கள் ஆன்றோர் பொன் மொழிகள் இவற்றிலிருநத் மேற்கொள் காட்டிப் பேசும் வல்லமை பெற்றவர்களாதலாலும் இவர்களுக்கு பிரசங்கங்கள் புரியவும், கதாகாலட்சேப புராண உபன்னியாசங்கள் செய்யவும் பல இடங்களிலிருந்து அழைப்புகள் தேடிவரும்.

இவர்களுக்கென்று சுய தொழில் ஏற்பட்டு நன்றாக வளமுடன் நடந்து வந்தாலும், ஓய்வுநேரங்களை வீணாக்க மாட்டார்கள். அத்தகைய நேரங்களில் பிறருக்கு கல்வி கற்பிப்பது, ஓவியம் தீட்டுவது, பிறமொழியில் இருக்கும் அரிய கருத்துக்களையும், கதை காவியங்களையும் தம் மொழியில் மொழி பெயர்ப்பு செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு தக்க ஊதியங்களும் பெற்றிடுவார்கள். பெரும்பாலோர் தர்க்க வாதம் புரிபவர்களாகவும் இருப்பார்கள். புகழ் பெற்ற வழக்கறிஞர்களாக இருப்பினும் பிறகாரியங்களிலும் தளராத ஊக்கத்துடன் செயலாற்றுவார்கள். இவர்கள் யோசனையில் ஈடுபடும் போதும் மறந்த விஷயங்கள் கவனத்துக்கு வரும்போதும் சில நேரம் கண்களை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்திடுவார்கள். இவர்களுடைய கண்கள் கவர்ச்சி கரமாகத் தோற்றமளிக்கும். பற்களை ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று தடவை சுத்தம் செய்து கொள்வார்கள்.

குடும்ப அமைப்பில் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். இவர்களுக்குத் தக்கபடி குடும்பம் அமைவது அதிர்ஷ்டமல்லவா? அந்தஸ்து, கௌரவம், கல்வித்திறமை இதற்கேற்றவாறு வாழ்க்கைத் துணைவி அமையாவிடினும் இவர்களுடைய வருமானத்துக்கேற்றவாறு சிக்கனத்துடனும் பொறுப்புடனும் குடும்பம் நடத்தும் வாழ்க்கைத் துணைவி இவர்களுக்கு அமைவர். சகல பொறுப்புகளையும் ஏற்று நடத்தும் மனைவி ஏற்படுவதால் இவர்களுடைய வாழ்க்கை சண்டை சச்சரவின்றி பூசல்களேதுமினறி அமைதியாக நடத்து வரும் என்றால் மிகையாகாது. இவர்களுக்கு அனுசரணையாய் சகல பொறுப்புகளையும் ஏற்று ஒற்றுமையாக செயல்படுபவர்களே மனைவியாய் அமைவார்கள்.

No comments:

என்னில் உள்ளது